Wednesday, June 7, 2017

யசீதி (Yazidi, Yezidi, Êzidî, Yazdani, ایزدیان Ayziyan, Եզդիներ Ezdiner,Езиды Ezidy)


Yezidis: Worshippers of peacock angel.
ie: Murugan

யசீதி (Yazidi, Yezidi, Êzidî, Yazdani, அரபு மொழி: ایزدیان Ayziyan, அருமேனிய: Եզդիներ Ezdiner, உருசியம்: Езиды Ezidy) என்பவர்கள் குர்தி மொழி பேசுகின்ற ஓர் இனச்சமயக் குழுவினர் ஆவர். இவர்கள் சியா, சூபி இசுலாமியச் சமயங்களின் கூறுகளை உள்ளக நாட்டுப்புற மரபுகளுடன் கலந்த சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்த மரபுகள் இந்திய, கிழக்கத்திய உள்ளுணர்வார்ந்த, கிறித்தவ, மெசபொட்டோமியச் சமயக் கூறுகளையும் தொன்மையான ஞானக் கொள்கை, மார்சினிய, சரத்துஸ்திர சமயக் கொள்கைகளையும் உள்ளடக்கியவை.

யசீதி மதப்பிரிவினர் ஈராக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மதப்பிரிவினர். இம்மதப்பிரிவினர் உலகில் மொத்தம் 7 இலட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் வட ஈராக்கின் சிஞ்சார் மலைப்பகுதியிலும் அதைச்சுற்றியுள்ள நகரங்களிலும் வாழ்கின்றனர். இனரீதியாக இவர்கள் குர்துக்கள். இவர்கள் பெரும்பாலும் தொன்மைய அசிரியாவின் பகுதியாகவிருந்த வடக்கு ஈராக்கின் நினேவெ மாநிலத்தில் வாழ்கின்றனர். ஐரோப்பாவிற்கு, குறிப்பாக ஜெர்மனிக்கு இவர்கள் குடி பெயர்ந்ததை அடுத்து ஆர்மீனியா, சியார்சியா மற்றும் சிரியா நாடுகளில் இவர்களது மக்கள்தொகை 1990களிலிருந்து வெகுவாக குறைந்துள்ளது.

யசீதிகள் உலகைப் படைத்தவர் கடவுள் என நம்புகின்றனர். தாம் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு ஏழு "புனித வாசிகள்" அல்லது தேவதூதர்களை உருவாக்கினார்; இவர்களது "தலைவராக" மெலக் டாசு என்ற "மயில் தேவதையை" ஏற்படுத்தினார். இந்த மயில் தேவதையே ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாவார். இந்தப் புராணக் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கடவுளையே எதிர்த்து கடவுளின் அருளிலிருந்து விலகி பின்னர் கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டு நரகத்தின் சிறைகளிலிருந்து மீண்டு கடவுளுடன் இணைந்தார். இக்கதை ஒரே கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுளின் கட்டளையை மீறி ஆதாம், ஏவாளை வழிபட்ட சூபி நம்பிக்கைகளின் இப்லிசுடன் தொடர்புடையது. சூபிய இப்லிசுடனான இத்தொடர்பால் மற்ற ஒரே கடவுள் சமயங்கள் மயில் தேவதையை தங்கள் சமய சாத்தானுடன் அடையாளப்படுத்தி யசீதிகளை "சாத்தானை வழிபடுவோர்" என பல நூற்றாண்டுகளாக ஒடுக்கி வருகின்றனர். இத்தகைய ஒடுக்குதல் தற்கால ஈராக் எல்லையில் முன்னர் சதாம் உசேனாலும் பின்னர் அடிப்படைவாத சுன்னி இசுலாம் புரட்சியாளர்களாலும் இன்னமும் தொடர்கின்றது.

இவர்கள் மாலிக் டவ்வூஸ் என்ற மயில் தேவதையை வழிபடுவதால் மற்ற மதத்தினர் சகித்துக் கொள்ள மறுக்கின்றனர். மயில் தேவதையை குத்துவிளக்கில் பொறித்து வைத்துக்கொள்வது இவர்களது வழக்கம். இதனால் சிலர் இவர்களை இந்துக்கள் என அழைக்கின்றனர். மொத்தம் ஏழு தேவதைகள் என்றும் அதில் தலையாயது இந்த மாலிக் டவ்வுஸ் என்றும் பிற தேவதைகள் அனைத்தும் அதற்கும் கீழே என்பது அவர்களின் நம்பிக்கை. கிருத்தவர்களுக்கு இருப்பதைப் போல ஞானஸ்தானம் உண்டு. இஸ்லாமியர்களைப் போலவும் யூதர்களைப் போலவும் விருத்தசேதனம் உண்டு. ஜெராஸ்டிரியர்களைப் போல தீ வழிபாடும் உண்டு. ஆனால் இவர்கள் ஆபிரகாமை ஏற்றுக் கொள்ளாதவர்கள். 11 ஆம் நூற்றாண்டில் உமையத் ஷேக் என்பவர்தான் இம்மதத்தை உருவாக்கினார், அல்லது நிறுவனமயமாக்கினார். இந்த மதம் யூத மதம், இஸ்லாமிய மதம், கிருத்தவ மதம், ஜெராஸ்டிர மதம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.

ஆகத்து 2014இல் ஈராக்கையும் அண்டைய நாடுகளையும் இசுலாமியமில்லா தாக்கங்களிலிருந்து "தூய்மைப்படுத்துமுகமாக" யசீதிகளை இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.

-Priya Saravanan

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

1 comment:

  1. துறையூர் துரை அரங்கன் அடி
    சேர்ந்தாற்கு யாண்டும் இடும்பை இல!

    ReplyDelete