Sunday, June 25, 2017

முருகப்பெருமான் எப்படி வென்றார்..?!



முருகப்பெருமானுக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது. எப்படி எல்லா உயிர்களும் இயற்கைக்கு ஆட்படும்போது முருகப்பெருமான் மட்டும் எப்படி வென்றார்..?!

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களே அனைத்து ஜீவர்கள், ஜடப்பொருட்கள் என இப்பிரபஞ்சத்தில் எல்லா வகையும் தோன்றுதற்கு காரணம் என்றும், அதுவே அவை வளர்வதற்கும், அழிவதற்கும் காரணமாக ஆகி இயற்கையாய் பரிமளித்தது என்று அறிந்து பஞ்ச பூதமானது தோற்ற உருவாகிய பருப்பொருளாய் உள்ளவரை அது இயற்கையின் நியதிக்கு உட்படும் என்றும், அதுவே நுண்பொருளாய் கண்ணுக்கு புலனாகா அரூப நிலையாய் உள்ளபோது அரூபமாய் உள்ள இயற்கை போல ஆகி பரிணாம வளர்ச்சிக்கு ஆட்படாமல் என்றும் இளமையாகவே இருப்பதையும் கண்டு கொண்டார் முருகப்பெருமான்.

தோற்றமாக உள்ள இந்த மனித தேகத்திலேதான் அதற்கான உபாயம் இருப்பதையும் வேறெந்த உடலிலும் அந்த உபாயம் இல்லாததையும் அறிந்து இந்த தேகம் பஞ்ச பூத தேகம், பஞ்சபூதமே ஆன்மாவை சுற்றி மும்மலச் சேறாக நாம் இதன்முன் செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப மலக்குற்றமாக மாறி ஆன்மாவை மாசுபடுத்தி நம்மை வஞ்சித்து கொல்கிறதையும் அறிந்தான்.

மாசு நீங்க வேண்டுமாயின் எந்த உயிர்களுக்கு துன்பம் செய்ததால் மாசு ஏற்பட்டதோ அந்த ஜீவர்களுக்கு அதாவது இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிந்தால் எல்லா உயிர்களும் இதம் செய்கின்ற உயிரை வாழ்த்துவதினால் எல்லா உயிர்களின் வாழ்த்தே ஆன்மாவை ஒளிபெறச் செய்து ஆன்மாவைப் பற்றியுள்ள மாசை நீக்குகிறதையும் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி எல்லா ஜீவர்களுக்கும் இரங்கி இதம் புரிவதற்கு வன்மனம் நீங்க வேண்டும். வன்மனம் நீங்க முருகனது ஆசியினால் அன்றி வன்மனம் நீங்காது. முருகனது திருவடி பற்றி பூசிக்க பூசிக்க நம்முள் அறிவு பெருகிடும். அறிவு பெருகினால் மட்டும் போதுமா, போதாது. வெறும் அறிவு நமது சிந்தனையை வளர்க்குமே தவிர ஆன்ம தெளிவை உண்டாக்காது, ஜென்மத்தைக் கடைத்தேற்றாது, பிற ஜீவர்களுக்கு உபகாரம் செய்து செய்து புண்ணிய பலத்தை பெருக்க வேண்டும். புண்ணியம் பெருக பெருக தெளிந்த அறிவு ஞானஅறிவாக மாறி ஆன்மா மாசுபட்டுள்ளதை உணர்த்தும்.

ஆன்மா மாசு நீங்கவும், ஜீவதயவைப் பெருக்கிடவும், தேவையான பொருளாதாரத்தை முருகனது திருவடி பற்றி பூஜை செய்ய செய்ய அதற்கும் அருள்வான் முருகன்.

பொருள் பெருகினால் போதாது, புண்ணியங்கள் செய்ய வாய்ப்பை அருள்வான் முருகன். புண்ணியம் செய்து செய்து ஜீவதயவை பெருக்கி பெருக்கி தூய ஞானஅறிவை பெறபெற பஞ்சபூதக்கட்டு படிப்படியாக உடையது விடும்.

பஞ்சபூதக் கட்டு உடைய வேண்டுமாயின் எந்த இயற்கை பருப்பொருளாக உண்டானதோ அந்த பருப்பொருளை உடைப்பதற்கும் இந்த பஞ்ச பூத சக்திகளே உதவியாய் உள்ளது.

காற்றாகிய பஞ்சபூதத்தின் உதவியால் அனலாகிய பஞ்சபூத சக்தியும் சேர்ந்து பெரும் மாற்றங்களை நமது தேகத்தினுள் ஏற்படுத்தும். அதை தெளிந்த குருநாதன் முன்னிலையில் ஒன்றிணைத்து ஒரு சிறப்பான வேதியியல் பொருளாய் செய்ய பஞ்சபூதக்கட்டு உடைந்து படிப்படியாக பருப்பொருளாய் உள்ள தூலதேகம் ஒளி பொருந்திய நுண்பொருள் ஒளிதேகமாக மாறிவிடும்.

இது மிகப்பெரும் ஞான இரகசியமாகும். இதை வழி நடத்த யாராலும் முடியாது. அந்த ஆதி ஞானத்தலைவன் முருகனே நம்மைச் சார்ந்து வழி நடத்தி நம்மை வாசி வசப்பட செய்து தேகத்திலுள்ள மும்மலக்கசடை நீக்கி ஆன்மாவை ஆக்கம் பெற செய்து தூலதேகத்திலே மறையதுள்ள சூட்சும தேகமாகிய ஒளி உடம்பை ஆக்கம் பெற செய்து செய்து இறுதியில் அருட்பெருஞ்ஜோதி வடிவமான ஒளிதேகத்தை பெற வேண்டும்.

இது தலைவன் முருகனால்தான் முடியும் என்பதையும் அறியலாம். வேறு எதனாலும் ஆகாது என்பது உறுதியான உண்மையாகும்.

அப்படி ஆதிஞானத்தலைவன் நம்மை சார்ந்து வழி நடத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றி ஒளி தேகத்தை அளிக்க வேண்டுமாயின் அதற்கு ஏராளமான புண்ணிய பலம் வேண்டும், பூஜை பலம் வேண்டும். வெறும் நூலறிவோ, ஏட்டுக் கல்வியோ, பயிற்சிகளோ ஒருபோதும் உதவாது.

-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
ஓங்காரக்குடில் Ongarakudil



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


No comments:

Post a Comment