Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Wednesday, August 31, 2016

பத்துமலையை குறி வைத்த பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 : நாட்டின் சில முக்கியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாத தாக்குதல் சதி திட்டத்தை போலீஸ் முறியடித்துள்ளது.


இந்துக்களின் முக்கியத் திருத்தலமாகக் கருதப்படும் பத்துமலை உட்பட தலைநகரிலுள்ள போலீஸ் நிலையங்கள், கேளிக்கை மையங்களை குறி வைத்து அந்த தாக்குதல் நடத்தப்படவிருந்ததாக போலீஸ் அறிவித்தது. அந்த சதி நாச வேலையின் பின்னணியாக செயல்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூவரை புக்கிட் அமான் போலீஸ் கைது செய்துள்ளது.

அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமான் பயங்கரவாத துடைத்தொழிப்பு பிரிவு அறிவித்தது. தேசிய தின கொண்டாட்டங்களுக்கு முதல் நாள் வெடி மருந்து மற்றும் சுடும் ஆயுதங்களைக் கொண்டு இத்தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக தொடக்க கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சிலாங்கூர், பஹாங் மாநிலங்களில் இம்மாதம் 27 ஆம் தேதியிலிருந்து 29 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் கீழ் அம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படை தலைவர் டான் ஸ்ரீ காலீட் அபு பக்கார் கூறினார். முகமட் வாண்டி முகமட் ஜேடி என அடையாளம் கூறப்படும் பயங்கரவாதியிடமிருந்து  அம்மூவரும் தாக்குதல் மேற்கொள்ள கட்டளைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவரான 20 வயது ஆடவர் சிலாங்கூரில் இம்மாதம் 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து  கே 75 ரக கையெறி குண்டும் கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இடைத்தரகரிடமிருந்து அந்த ஆடவர் தாக்குதலுக்கான ஆயுதங்களைப் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், 27 மற்றும் 20 வயதான மேலும் இரு ஆடவர்கள் 29 ஆம் தேதி கைதாகினர். தாக்குதலுக்குப் பின் அவர்கள் அனைவரும் சிரியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. — தி மலேசியன் டைம்ஸ்

No comments:

Post a Comment